1 Kings 1 இராஜாக்கள்
1 கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
2 பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்:
3 நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு.
4 அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார்.
5 அவன் போய், கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான்.
6 காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தது; தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்.
7 தேசத்தில் மழைபெய்யாதபடியினால், சிலநாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று.
8 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்:
9 நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்.
10 அப்படியே அவன் எழுந்து, சாறிபாத்துக்குப் போனான்; அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்த போது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்; அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான்.
11 கொண்டுவர அவள் போகிறபோது அவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான்.
12 அதற்கு அவள்: பானையில் ஒரு பிடிமாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள்.
13 அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா; பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம்.
14 கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
15 அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள்.
16 கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை.
17 இவைகள் நடந்தபின்பு, வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான்; அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது.
18 அப்பொழுது அவள் எலியாவை நோக்கி: தேவனுடைய மனுஷனே, எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணவும், என் குமாரனைச் சாகப்பண்ணவுமா? என்னிடத்தில் வந்தீர் என்றாள்.
19 அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி, அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன் கட்டிலின்மேல் வைத்து:
20 என் தேவனாகிய கர்த்தாவே, நான் தங்கியிருக்க இடங்கொடுத்த இந்த விதவையின் மகனைச் சாகப்பண்ணினதினால் அவளுக்குத் துக்கத்தை வருவித்தீரோ என்று கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு;
21 அந்தப் பிள்ளையின்மேல் மூன்று தரம் குப்புறவிழுந்து: என் தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.
22 கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான்.
23 அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவன் தாயினிடத்தில் கொடுத்து: பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்று சொன்னான்.
24 அப்பொழுது அந்த ஸ்திரீ எலியாவை நோக்கி: நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள்.