Job யோபு
1 அப்பொழுது தேமானியனான் எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:
2 நாங்கள் உம்முடனே பேசத்துணிந்தால், ஆயாசப்படுவீரோ? ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ளத்தக்கவன் யார்?
3 இதோ, நீர் அநேகருக்குப் புத்திசொல்லி இளைத்த கைகளைத் திடப்படுத்தினீர்.
4 விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர்.
5 இப்பொழுதோ துன்பம் உமக்கு நேரிட்டபடியினால் ஆயாசப்படுகிறீர்; அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர்.
6 உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும், உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாயும் இருக்கவேண்டியதல்லவோ?
7 குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அதம்பண்ணப்பட்டது எப்போ? இதை நினைத்துப்பாரும்.
8 நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.
9 தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து, அவருடைய நாசியின் காற்றினாலே நிர்மூலமாகிறார்கள்.
10 சிங்கத்தின் கெர்ச்சிப்பும், துஷ்ட சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; பாலசிங்கங்களின் பற்களும் தகர்ந்துபோம்.
11 கிழச்சிங்கம் இரையில்லாமையால் மாண்டுபோம், பாலசிங்கங்கள் சிதறுண்டுபோம்.
12 இப்போதும் ஒருவார்த்தை என்னிடத்தில் இரகசியமாய் அறிவிக்கப்பட்டது, அதினுடைய மெல்லிய ஓசை என் செவியில் விழுந்தது.
13 மனுஷர்மேல் அயர்ந்த நித்திரை இறங்குகையில், இராத்தரிசனங்களில் பலவித தோற்றங்கள் உண்டாகும்போது,
14 திகிலும் நடுக்கமும் என்னைப்பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கினது.
15 அப்பொழுது ஒரு ஆவி என் முகத்துக்கு முன்பாகக் கடந்தது, என் உடலின் மயிர் சிலிர்த்தது.
16 அது ஒரு உருப்போல என் கண்களுக்குமுன் நின்றது, ஆனாலும் அதின் ரூபம் இன்னதென்று விளங்கவில்லை; அமைதலுண்டாயிற்று, அப்பொழுது நான் கேட்ட சத்தமாவது:
17 மனுஷன் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ? மனுபுத்திரன் தன்னை உண்டாக்கினவரைப்பார்க்கிலும் சுத்தமாயிருப்பானோ?
18 கேளும், அவர் தம்முடைய பணிவிடைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை; தம்முடைய தூதரின்மேலும் புத்தியீனத்தைச் சுமத்துகிறாரே.
19 புழுதியில் அஸ்திபாரம் போட்டு, மண் வீடுகளில் வாசம்பண்ணி, பொட்டுப்பூச்சியால் அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி?
20 காலை முதல் மாலைவரைக்கும் மடிந்து, கவனிப்பார் ஒருவருமில்லாமல், நித்திய அழிவடைகிறார்கள்.
21 அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ? ஞானமடையாமல் சாகிறார்கள் என்று சொன்னான்.