Home |  | Audio |  | Index |  | Verses

Song of Songs உன்னதப்பாட்டு

Chapter: 1 2 3 4 5 6 7 8

1 நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்.
2 முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்.
3 காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது.
4 என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே.
5 திராட்சரசத்தால் என்னைத் தேற்றுங்கள், கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்; நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன்.
6 அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவர் வலதுகை என்னை அணைத்துக்கொள்ளுகிறது.
7 எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும், நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.
8 இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகள்மேல் குதித்தும் மேடுகள்மேல் துள்ளியும் வருகிறார்.
9 என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார்; இதோ, அவர் எங்கள் மதிலுக்குப்புறம்பே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்து, கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார்.
10 என் நேசர் என்னோடே பேசி: என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்து வா.
11 இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது.
12 பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது குருவிகள் பாடுங்காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் தேசத்தில் கேட்கப்படுகிறது.
13 அத்திமரம் காய்காய்த்தது; திராட்சக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது; என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்துவா.
14 கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முக ரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும் உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது என்றார்.
15 திராட்சத்தோட்டங்களைக் காக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே.
16 என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.
17 என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.

Top |  | Next Chapter  |  | Index |  | Home
Full online version here [with search engine, multilingual display and audio Bible]