Home |  | Audio |  | Index |  | Verses

Daniel தானியேல்

Chapter: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12

1 பெல்ஷாத்சார் என்னும் ராஜா தன் பிரபுக்களில் ஆயிரம்பேருக்கு ஒரு பெரிய விருந்து செய்து அந்த ஆயிரம்பேருக்கு முன்பாகத் திராட்சரம் குடித்தான்.
2 பெல்ஷாத்சார் திராட்சரசத்தை ருசித்துக்கொண்டிருக்கையில், அவன் தன் தகப்பனாகிய நேபுகாதநேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டுவந்த பொன் வெள்ளி பாத்திரங்களில், ராஜாவாகிய தானும் தன் பிரபுக்களும் தன் மனைவிகளும் தன் வைப்பாட்டிகளும் குடிக்கிறதற்காக அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான்.
3 அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய வீடாகிய ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பொற்பாத்திரங்களைக் கொண்டுவந்தார்கள்; அவைகளில் ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் அவனுடைய மனைவிகளும் அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்தார்கள்.
4 அவர்கள் திராட்சரம் குடித்து, பொன்னும் வெள்ளியும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தார்கள்.
5 அந்நேரத்திலே மனுஷர் கைவிரல்கள் தோன்றி விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று; எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான்.
6 அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கப்பண்ணினது; அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது.
7 ராஜா உரத்த சத்தமிட்டு; ஜோசியரையும் கல்தேயரையும் குறிசொல்லுகிறவர்களையும் உள்ளே அழைத்துவரும்படி சொன்னான். ராஜா பாபிலோன் ஞானிகளை நோக்கி: இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பான் என்று சொன்னான்.
8 அப்பொழுது ராஜாவின் ஞானிகளெல்லாரும் வந்து சேர்ந்தார்கள்; ஆனாலும் அவர்கள் அந்த எழுத்தை வாசிக்கவும். அதின் அர்த்தத்தை ராஜாவுக்குத் தெரிவிக்கவும் கூடாதிருந்தது.
9 அப்பொழுது ராஜாவாகிய பெல்ஷாத்சார் மிகவும் கலங்கினான்; அவனுடைய முகம் வேறுபட்டது; அவனுடைய பிரபுக்கள் திகைத்தார்கள்.
10 ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் சொன்னவைகளை ராஜாத்தி கேள்விப்பட்டு விருந்துசாலைக்குள் பிரவேசித்தாள். அப்பொழுது ராஜாத்தி: ராஜாவே நீர் என்றும் வாழ்க; உமது நினைவுகள் உம்மைக் கலங்கப்பண்ணவும், உமது முகம் வாடவும் வேண்டியதில்லை.
11 உம்முடைய ராஜ்யத்திலே ஒரு புருஷன் இருக்கிறான். அவனுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது; உம்முடைய பிதாவின் நாட்களில் வெளிச்சமும் விவேகமும் தேவர்களின் ஞானத்துக்கு ஒத்த ஞானமும் அவனிடத்தில் காணப்பட்டது; ஆகையால் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவானவர் அவனைச் சாஸ்திரிகளுக்கும் ஜோசியருக்கும் கல்தேயருக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் அதிபதியாக வைத்தார்.
12 ராஜாவினால் பெல்தெஷாத்சாரென்னும் பேரிடப்பட்ட அந்த தானியேலுக்குள் சொப்பனங்களை வியார்த்திபண்ணுகிறதும், புதைபொருள்களை வெளிப்படுத்துகிறதும், கருகலானவைகளைத் தெளிவிக்கிறதுமான அறிவும் புத்தியும் விசேஷித்த ஆவியும் உண்டென்று காணப்பட்டது; இப்போதும் தானியேல் அழைக்கப்படட்டும், அவன் அர்த்தத்தை வெளிப்படுத்துவான் என்றாள்.
13 அப்பொழுது தானியேல் ராஜாவின்முன் உள்ளே அழைத்துவந்துவிடப்பட்டான்; ராஜா தானியேலைப் பார்த்து: நீ என் பிதாவாகிய ராஜா யூதாவிலிருந்து சிறைபிடித்துவந்த யூதரில் ஒருவனாகிய தானியேல் அல்லவா?
14 உனக்குள்ளே தேவர்களின் ஆவி உண்டென்றும், வெளிச்சமும் புத்தியும் விசேஷித்த ஞானமும் உன்னிடத்தில் காணப்பட்டதென்றும் உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்.
15 இப்போதும் இந்த எழுத்தை வாசிக்கிறதற்கும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்கும் சாஸ்திரிகளும் ஜோசியரும் எனக்கு முன்பாக அழைத்துக்கொண்டுவரப்பட்டார்கள்; ஆனாலும் இந்த வசனத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்த அவர்களால் கூடாமற்போயிற்று.
16 பொருளை வெளிப்படுத்தவும் கருகலானவைகளைத் தெளிவிக்கவும் உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்போது நீ இந்த எழுத்தை வாசிக்கவும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கவும் உன்னாலே கூடுமானால், நீ இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பாய் என்றான்.
17 அப்பொழுது தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: உம்முடைய வெகுமானங்கள் உம்மிடத்திலேயே இருக்கட்டும்; உம்முடைய பரிசுகளை வேறொருவனுக்குக் கொடும். இந்த எழுத்தை நான் ராஜாவுக்கு வாசித்து, இதின் அர்த்தத்தைத் தெரிவிப்பேன்.
18 ராஜாவே உன்னதமான தேவன் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு ராஜ்யத்தையும் மகத்துவத்தையும் கனத்தையும் மகிமையையும் கொடுத்தார்.
19 அவருக்குக் கொடுக்கப்பட்ட மகத்துவத்திலே சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவருக்கு முன்பாக நடுங்கிப் பயந்திருந்தார்கள்; அவர் தமக்குச் சித்தமானவனைக் கொன்றுபோடுவார், தமக்குச் சித்தமானவனை உயிரோடே வைப்பார், தமக்குச் சித்தமானவனை உயர்த்துவார், தமக்குச் சித்தமானவனைத் தாழ்த்துவார்.
20 அவருடைய இருதயம் மேட்டிமையாகி, அவருடைய ஆவி கர்வத்தினாலே கடினப்பட்டபோது, அவர் தமது சிங்காசனத்திலிருந்து தள்ளப்பட்டார்; அவருடைய மகிமை அவரைவிட்டு அகன்றுபோயிற்று.
21 அவர் மனுஷரினின்று தள்ளப்பட்டார்; அவருடைய இருதயம் மிருகங்களுடைய இருதயம்போலாயிற்று; காட்டுக்கழுதைகளோடே சஞ்சரித்தார்; உன்னதமான தேவன் மனுஷரின் ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமானவனை அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று அவர் உணர்ந்துகொள்ளுமட்டும் மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தார்; அவருடைய சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.
22 அவருடைய குமாரனாகிய பெல்ஷாத்சார் என்னும் நீரோவென்றால், இதையெல்லாம் அறிந்திருந்தும், உமது இருதயத்தைத் தாழ்த்தாமல்,
23 பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக உம்மை உயர்த்தினீர்; அவருடைய ஆலயத்தின் பாத்திரங்களை உமக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்; நீரும், உம்முடைய பிரபுக்களையும், உம்முடைய மனைவிகளும் உம்முடைய வைப்பாட்டிகளும் அவைகளில் திராட்சரசம் குடித்தீர்கள்; இதுவுமன்றி, தம்முடைய கையில் உமது சுவாசத்தை வைத்திருக்கிறவரும், உமது வழிகளுக்கு எல்லாம் அதிகாரியுமாகிய தேவனை நீர் மகிமைப்படுத்தாமல் காணாமலும் கேளாமலும் உணராமலும் இருக்கிற வெள்ளியும் பொன்னும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தீர்.
24 அப்பொழுது அந்தக் கையுறுப்பு அவரால் அனுப்பப்பட்டு, இந்த எழுத்து எழுதப்பட்டது
25 எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால்: மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் என்பதே.
26 இந்த வசனத்தின் அர்த்தமாவது: மெனே என்பதற்கு, தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு அதற்கு முடிவுண்டாக்கினார் என்றும்,
27 தெக்கேல் என்பதற்கு நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய் என்றும்,
28 பெரேஸ் என்பதற்கு, உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது என்றும் அர்த்தமாம் என்றான்.
29 அப்பொழுது பெல்ஷாத்சார் தானியேலுக்கு இரத்தாம்பரத்தையும், அவனுடைய கழுத்தில் பொற்சரப்பணியையும் தரிப்பிக்கவும், ராஜ்யத்திலே அவன் மூன்றாம் அதிகாரியாயிருப்பவன் என்று அவனைக்குறித்துப் பறைமுறையிடவும் கட்டளையிட்டான்.
30 அன்று இராத்திரியிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலைசெய்யப்பட்டான்.
31 மேதியனாகிய தரியு தன் அறுபத்திரண்டாம் வயதில் ராஜ்யத்தைக்கட்டிக்கொண்டான்.

Top |  | Next Chapter  |  | Index |  | Home
Full online version here [with search engine, multilingual display and audio Bible]