Genesis ஆதியாகமம்
1 அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து:
2 ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டுமுகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள்.
3 அவன் அவர்களை மிகவும் வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்தார்கள்.
4 அவர்கள் படுக்கும் முன்னே, சோதோம் பட்டணத்து மனிதராகிய வாலிபர்முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு,
5 லோத்தைக் கூப்பிட்டு: இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டு வா என்றார்கள்.
6 அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடத்தில் போய்:
7 சகோதரரே, இந்த அக்கிரமம் செய்ய வேண்டாம்.
8 இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்; இந்தப்புருஷர் என் கூரையின் நிழலிலே வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான்.
9 அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள்.
10 அப்பொழுது அந்தப் புருஷர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தைத் தங்களண்டைக்கு வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு, கதவைப் பூட்டி,
11 தெருவாசலிலிருந்த சிறியோரும் பெரியோருமாகிய மனிதருக்குக் குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினார்கள்; அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள்.
12 பின்பு அந்தப் புருஷர் லோத்தை நோக்கி: இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? மருமகனாவது, உன் குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போ.
13 நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்; இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள்.
14 அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப் போகிறார் என்றான்; அவனுடைய மருமக்கள்மாரின் பார்வைக்கு அவன் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது.
15 கிழக்கு வெளுக்கும்போது அந்தத் தூதர் லோத்தை நோக்கி: பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டுபோ என்று சொல்லி, அவனைத் துரிதப்படுத்தினார்கள்.
16 அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.
17 அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நிற்காதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்.
18 அதற்கு லோத்து: அப்படியல்ல ஆண்டவரே,
19 உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபைகிடைத்ததே; என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக விளங்கப்பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன்.
20 அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அதற்கு ஓடிப்போகத்தக்கதாய் அது கிட்ட இருக்கிறது; என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே என்றான்.
21 அதற்கு அவர்: நீ கேட்டுக்கொண்ட ஊரை நான் கவிழ்த்துப்போடாதபடிக்கு, இந்த விஷயத்திலும் உனக்கு அநுக்கிரகம்பண்ணினேன்.
22 தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக் கூடாது என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார் என்னப்பட்டது.
23 லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது.
24 அப்பொழுது கர்த்தர் சோதோமின்மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி,
25 அந்தப் பட்டணங்களையும், அந்தச் சம பூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்.
26 அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.
27 விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து, தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய்,
28 சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும், சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்த்தான்; அந்தப் பூமியின் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று.
29 தேவன் அந்தச் சம பூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப் போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பி விட்டார்.
30 பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள்.
31 அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.
32 நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள்.
33 அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
34 மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக்குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.
35 அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக்குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்து போய், அவனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
36 இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.
37 மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன்.
38 இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.