Home |  | Audio |  | Index |  | Verses

Genesis ஆதியாகமம்

Chapter: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50

1 கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்.
2 பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடே காக்கும் பொருட்டு, நீ சுத்தமான சகல மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக எவ்வேழு ஜோடும், சுத்தமல்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும்,
3 ஆகாயத்துப் பறவைகளிலும், சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள்.
4 இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான் உண்டாக்கின ஜீவஜந்துக்கள் அனைத்தையும் பூமியின்மேல் இராதபடி நிக்கிரகம் பண்ணுவேன் என்றார்.
5 நோவா தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான்.
6 ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநூறு வயதாயிருந்தான்.
7 ஜலப்பிரளயத்துக்குத் தப்பும்படி நோவாவும் அவனுடனேகூட அவன் குமாரரும், அவன் மனைவியும் அவன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசித்தார்கள்.
8 தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமல்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும்,
9 ஆணும் பெண்ணும் ஜோடு ஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குட்பட்டன.
10 ஏழுநாள் சென்றபின்பு பூமியின்மேல் ஜலப்பிரளயம் உண்டாயிற்று.
11 நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன.
12 நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது.
13 அன்றைத்தினமே நோவாவும், நோவாவின் குமாரராகிய சேமும் காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும், அவன் குமாரரின் மூன்று மனைவிகளும், பேழைக்குள் பிரவேசித்தார்கள்.
14 அவர்களோடு ஜாதிஜாதியான சகலவிதக் காட்டு மிருகங்களும், ஜாதிஜாதியான சகலவித நாட்டு மிருகங்களும், பூமியின்மேல் ஊருகிற ஜாதிஜாதியான சகலவித ஊரும் பிராணிகளும், ஜாதிஜாதியான சகலவிதப் பறவைகளும், பலவிதமான சிறகுகளுள்ள சகலவிதப் பட்சிகளும் பிரவேசித்தன.
15 இப்படியே ஜீவசுவாசமுள்ள மாம்ச ஜந்துக்கள் எல்லாம் ஜோடு ஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குள் பிரவேசித்தன.
16 தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாகச் சகலவித மாம்ச ஜந்துக்களும் உள்ளே பிரவேசித்தன; அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளேவிட்டுக் கதவை அடைத்தார்.
17 ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியின்மேல் உண்டானபோது, ஜலம் பெருகி, பேழையைக் கிளம்பப்பண்ணிற்று; அது பூமிக்குமேல் மிதந்தது.
18 ஜலம் பெருவெள்ளமாகி, பூமியின்மேல் மிகவும் பெருகிற்று; பேழையானது ஜலத்தின்மேல் மிதந்துகொண்டிருந்தது.
19 ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகினதினால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன.
20 மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப் பதினைந்துமுழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று.
21 அப்பொழுது மாம்சஜந்துக்களாகிய பறவைகளும், நாட்டு மிருகங்களும் காட்டு மிருகங்களும் பூமியின்மேல் ஊரும் பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன்களும், பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன.
22 வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின.
23 மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின; நோவாவும் அவனுடனே பேழையில் இருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன.
24 ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக்கொண்டிருந்தது.

Top |  | Next Chapter  |  | Index |  | Home
Full online version here [with search engine, multilingual display and audio Bible]